அண்ணாமலையார் கோயில் (திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்) சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர்ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. ரமணர் தவமிருந்த தலம் இதுவாகும்
பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும்
இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இது நெருப்பிற்கான தலம் ஆகும். முக்தி தரும் தலங்கள் நான்கென சிவபுராணம்குறிப்பிடுகிறது. அவற்றுள் திருவண்ணாமலையும் ஒன்று.
சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற தலம்
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மகா சிவராத்திரி நாளாகும்.
நால்வரால் பாடல்பெற்ற திருத்தலம்
திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.






0 comments:
Post a Comment